Wednesday, January 9, 2013

நீர்ப்பறவை : புதிய பார்வைவெளியில்.....

தற்காலத்தில், தமிழர் வாழ்வியலில் இருந்து அந்நியப்பட்ட கதைக்களமும் பாத்திரங்களின் ஆக்கிரமிப்பும் அந்நிய பண்பாட்டு மயமாக்கலும் தமிழ்ப் படங்களாக வந்து குவிகின்றன. 

தமிழ்ச் சூழலின் கேளிக்கை என்ற அளவைத் தாண்டி இன்னும் சினிமா புரிந்துகொள்ளப்படவில்லை. இன்றைய தீவிர சினிமாவின் இலக்கு வாழ்வைக் காட்சி நிலையில் அப்படியே பிரதிபலிப்பது மட்டுமல்ல, மாறாக வாழ்வின் முக்கிய பிரச்சினையாகக் கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும் அவதானித்து வெளிப்படுத்துவதும் முக்கியம். இந்தப் பண்புடன் கூடிய தமிழ்ப் படங்கள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ள போதிலும், இவற்றைக் கண்டுகொள்ளக்கூடிய பார்வைவெளி இன்னமும் விரிவாக்கம் பெறவில்லை.

அந்த ரீதியில் தற்போது வெளிவந்துள்ள நீர்ப்பறவை எனும் படம் மீது நமது கவனத்தை குவிப்பது முக்கியம். இப்படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளர். இவர் இதுவரை தமிழில் கூடல்நகர், தென்மேற்குப் பருவக்காற்று முதலான படங்களை இயக்கியுள்ளார்.




நீர்ப்பறவை என்ற படம், கடலோர கிறிஸ்தவ நிலம் ஒன்றில் மையங்கொண்டுள்ளது. துப்பாக்கி, இரத்தம் இல்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை, வன்முறையை காதலோடு சமூக, மனித உறவுகள் சார்ந்தும் கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், வலிகள், இழப்புகள் யாவற்றையும் கூட்டுமையப்படுத்திய எதார்த்த கதைக்களமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நீர்ப்பறவை கதை ஒரு மீனவ நிலத்தில் நிகழ்கிறது. கடலில் அகதியாய் வந்து பிள்ளைகளற்ற பெற்றோர் (சரண்யா, ஸ்ரீராம்) தத்தெடுத்து வளர்க்கும் செல்ல மகனாக அருளப்பசாமி (விஷ்ணு) கதாநாயகனாக கதைக்களமாக பரிணாமம் பெறுகிறான். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நந்திதாஸ் முதன்மைப் பாத்திரத்தில் தோன்றியுள்ளார்.




ஈழத்தின் கிளிநொச்சியிலிருந்து தமிழ்நாட்டிற்கு அகதியாக தப்பிச்செல்லும் குடும்பம் நடுக்கடலில் கடற்படையினரால் வள்ளத்துக்குள் வைத்து பெற்றோர்கள் சுடப்பட்டு கிடக்க சிறுவனொருவன் அழுதுகொண்டிருக்கிறான். இந்தக் காட்சியின் பின்னர் ஏற்படக்கூடிய வளர்ச்சிகளும் தர்க்கங்களும்தான் ரீர்ப்பறவை படத்தில் எங்கும் துப்பாக்கி சுடும் வன்முறைக் காட்சிகளையோ அல்லது இராணுவத்தின் அதிகார மமதையோ காட்சிப்படுத்தாமல் மனத்திரை எழுப்பும் உணர்வுகளில் சுழல் சிந்தனைப் படிவங்களின் காட்சிகளில் விரிவுக்கான தயார் நிலை உருவாக்கப்படுவது இப்பட இயக்குனரின் திறமைக்கு எடுத்துக்காட்டு.

ஒருநாள் கடலுக்குச் சென்ற அருளப்பசாமி இரண்டு நாட்களாகியும் கரை திரும்பவில்லை. குடும்பமே பதற்றத்தில் இருக்கும் அந்நேரத்தில் தந்தை தனது மகனைத் தேடி கடலுக்குச் செல்கின்றார். அங்கே படகில் துப்பாக்கி வேட்டுக்கு இரையாகி அருளப்பசாமி இறந்து கிடக்கின்றான். தந்தை அவனைத் தூக்கிக்கொண்டு கரை சேர்கிறார்.

இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்பதை பார்வையாளர்கள் ஊகிக்கும் வகையில் இது காட்சியாக்கப்பட்டுள்ளது.

எந்தப் புள்ளியில் கதை தொடங்கியதோ அதே புள்ளியில் கதை வேறு பரிமணம் எடுக்கிறது. கதை சொல்லலும் காட்சிப்படுத்தலும் கடல் நிலம் சார்ந்த வாழ்வியல் கூறுகளில் உயிர்ப்புத் தளமாக மையங்கொண்டிருப்பது இப்படத்தின் சிறப்பு எனலாம். 

வீட்டோடு இருந்த பையனை வீட்டிலே புதைத்து விடுவோம். பொலிஸுக்கு தெரிந்தால் நியாயங்கிடைக்குதோ, இல்லையோ உடம்பைக் குத்திக் கிழித்து போஸ்மாடம் பண்ணி நாசம் செய்து விடுவார்கள் என எஸ்தரும் பெற்றோரும் புலம்பி அழுகின்றனர். இந்தக் காட்சி ஒருகணம் பார்வையாளர்களை நிமிர வைக்கிறது. இந்தக் கதையை எஸ்தர் மூலம் சின்ன வயது சுனைனா பெரிய வயது நந்திதாஸ் மூலம் இயல்பாக சொல்லப்படுகிறது.

கதையின் உத்திக்கு ஏற்ப காட்சிப்படுத்தல்கள், பின்னணி இசை, படத்தொகுப்பு யாவும் மிகப் பொருந்தி உள்ளன. நடிகர்களின் தேர்வும் கதைக்களமும் ஒளிப்பதிவும் பாராட்டும் வகையிலேயே உள்ளன.


தினமும் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதும் அவர்களை வலுக்கட்டாயமாக சிறையில் அடைப்பதும் நமக்கு செய்திகளாகத் தொடர்கின்றன. ஆனால், தமிழகக் கிராமப் பகுதிகளில் இது ஏற்படுத்தும் உணர்வலைகள், கொந்தளிப்புகள் யாவும் வெளிச்சத்திற்கு வருவதாக இல்லை. தமிழகம், ஈழம் சார்ந்து வெளிப்படக்கூடிய தமிழர் வாழ்வியலில் கண்டுணரும் நெருக்கடிகள், இழப்புகள் என்பன வாழ்வியலில் எவ்வாறு தெரிவிற்கான களங்களைத் திறந்துவிடுகின்றன என்பது பற்றிய தேடல் முக்கியம்.

நீர்ப்பறவை - நம் ஒவ்வொருவருக்குள்ளும் சுழல் பார்வைக்கான வாழ்வியலுக்கான ஒரு மாதிரிக் கூறாகவும் படைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பேசிய அரசியலும் சரி பேசாமல் விட்ட அரசியலும் சரி இந்திய - இலங்கை மைய நீரோட்ட அரசியலில் தாக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.




 படித்தவற்றில் பிடித்தது


 நன்றி.

No comments:

Post a Comment

கருத்துக்கள்