Saturday, October 20, 2012

2050 இல் 100 வயதில் 30 இலட்சம் பேர்


உலகில் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் அறிக்கையொன்றில் 2050 ஆம் ஆண்டளவில் உலகில் சிறுவர்களை விடக் கூடுதலான எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் இருப்பார்கள் என்று வியப்பைத்தரும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.







21 ஆம் நூற்றாண்டில் உலகில் முதுமைப்படுதல்; ஒரு கொண்டாட்டமும் ஒரு சவாலும் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் இன்று உலகில் நூறு வயதை அடைந்த மூன்று இலட்சத்து பதினாறாயிரம் பேர் இருப்பதாகவும் இத்தகையவர்களின் தொகை 2050 ஆம் ஆண்டளவில் பத்து மடங்காகி சுமார் 30 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.









வயோதிபர்களினால் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிட்டுகின்றன.

ஆனால் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது என்பது சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் நாடுகளுக்கு பாரதூரமான சவால்களைத் தோற்றுவிக்கும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

உலக சனத்தொகை முதுமை அடைதல் என்ற பிரச்சினை உலகளாவிய ரீதியில் அலட்சியம் செய்ய முடியாததாகிவிட்டது.

பொதுவான சனத்தொகை அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் வயோதிபர்களின் அதிகரிப்பு வீதம் கூடுதலானதாகவிருக்கின்றது.

இது வாழ்வின் தரம் உயர்ந்திருக்கிறது என்ற வரவேற்கத்தக்க அம்சத்தை உணர்த்துகின்றது என்ற போதிலும் பொருளாதார ரீதியில் பாரிய சவால்களைத் தோற்றுவிக்கக்கூடியது என்றும் செயலாளர் நாயகம் கூறியிருக்கிறார்.

வயோதிபர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களில் நூறு கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி.

Thursday, October 4, 2012

இனிப்பு பானங்களால் எடை அதிகரிக்கும்

 இனிப்பு சோடா மற்றும் பழ பானங்கள் என்பவை உடற்பருமன் என்ற நோயுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளன என்பதை அமெரிக்காவில் கடந்த வாரம் வெளியான மூன்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.


 

1970 களிலிருந்து இத்தகைய பானங்களின் நுகர்வு இரண்டு மடங்கை விடவும் அதிகரித்து வந்துள்ளது. மேலும், இதே காலத்தில் அமெரிக்கர்களில் வயது வந்தவர்களில் 30% மானோருக்கு உடற்பருமன் அதிகரித்துள்ளது. இவ்வாறு New England Journal of Medicine இனால் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகின்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளடங்களாக 33000 இற்கு மேற்பட்ட அமெரிக்கர்களை உள்ளடக்கி முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இத்தகைய இனிப்பான பானங்களை பருகுவது ஒருவரின் எடையை கட்டுப்படுத்தும் மரபணுக்களை பாதிக்கின்றது என கூறப்பட்டுள்ளது. இவ் ஆய்வில், உடல் எடையை பாதிக்கும் 32 வேறுபட்ட மரபணுக்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் பங்கேற்றவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், இனிப்பு பானங்களின் நுகர்வு மற்றும் உடற்பயிற்சி முறைகள் என்பவற்றையும் அவர்கள் கவனத்தில் கொண்டனர்.
 
சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரின் கலோரி தொடர்பாக ஏனைய இரண்டு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன. எடையை குறைப்பதில் மினெரல் தண்ணீர் மற்றும் மென்பானங்கள் ஆகியவை கொண்டுள்ள செல்வாக்கை அறியும் நோக்குடன் இவை நடாத்தப்பட்டன.

Boston இலுள்ள சிறுவர்களுக்கான மருத்துவமனையில், எடை கூடுதலாக உள்ள 224 இளம் பருவத்தினரிடம் முதலாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தண்ணீர் அல்லது மென்பானங்களை நுகர்வதற்கு ஒரு வருடகாலம் இவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இவர்களில் சாதாரண பானங்களைக் குடித்தவர்களிடையே 0.68 Kg எடை அதிகரிப்பு ஏற்பட்ட அதேவேளை, இனிப்பான பானங்களை பருகியவர்களிடத்தில் 1.5 Kg அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.



நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் 4-11 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களை உள்ளடக்கி மற்றைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பாதியினர் இனிப்பான மற்றும் பழ பானங்களையும் மற்றைய பாதியினர் இனிப்பற்ற பானங்களையும் அருந்தினர்.

18 மாதங்களிற்குப் பின்னர், குறைந்த கலோரியுடைய பானங்களை பருகிய சிறுவர்களிடத்தில் சராசரியாக 6.39 Kg அதிகரித்திருந்ததுடன், இனிப்பான பானங்களை அருந்தியவர்களிடத்தில் 7.36 Kg அதிகரிப்பு காணப்பட்டிருந்தது.

இந்த மூன்று ஆய்வுகளும், இனிப்பு பானங்களின் நுகர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்கான வலுவான உத்வேகத்தை வழங்குவதாக மருத்துவர் Sonia Caprio கூறியுள்ளார்.




நன்றி.