Saturday, October 20, 2012

2050 இல் 100 வயதில் 30 இலட்சம் பேர்


உலகில் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டு இருக்கும் அறிக்கையொன்றில் 2050 ஆம் ஆண்டளவில் உலகில் சிறுவர்களை விடக் கூடுதலான எண்ணிக்கையில் ஓய்வூதியர்கள் இருப்பார்கள் என்று வியப்பைத்தரும் தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.







21 ஆம் நூற்றாண்டில் உலகில் முதுமைப்படுதல்; ஒரு கொண்டாட்டமும் ஒரு சவாலும் என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டிருக்கும் அந்த அறிக்கையில் இன்று உலகில் நூறு வயதை அடைந்த மூன்று இலட்சத்து பதினாறாயிரம் பேர் இருப்பதாகவும் இத்தகையவர்களின் தொகை 2050 ஆம் ஆண்டளவில் பத்து மடங்காகி சுமார் 30 இலட்சமாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.









வயோதிபர்களினால் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க நன்மைகள் கிட்டுகின்றன.

ஆனால் வயோதிபர்களின் தொகை அதிகரித்து வருவது என்பது சுகாதார பராமரிப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற விவகாரங்களில் நாடுகளுக்கு பாரதூரமான சவால்களைத் தோற்றுவிக்கும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்திருக்கிறார்.

உலக சனத்தொகை முதுமை அடைதல் என்ற பிரச்சினை உலகளாவிய ரீதியில் அலட்சியம் செய்ய முடியாததாகிவிட்டது.

பொதுவான சனத்தொகை அதிகரிப்பு விகிதத்தைக் காட்டிலும் வயோதிபர்களின் அதிகரிப்பு வீதம் கூடுதலானதாகவிருக்கின்றது.

இது வாழ்வின் தரம் உயர்ந்திருக்கிறது என்ற வரவேற்கத்தக்க அம்சத்தை உணர்த்துகின்றது என்ற போதிலும் பொருளாதார ரீதியில் பாரிய சவால்களைத் தோற்றுவிக்கக்கூடியது என்றும் செயலாளர் நாயகம் கூறியிருக்கிறார்.

வயோதிபர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களில் நூறு கோடியைத் தாண்டும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


நன்றி.

1 comment:

  1. வாழ்வின் தரம் உயர்ந்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி தான்... ஆனால் தகவல் வியப்பை அளித்தது...

    நன்றி...

    ReplyDelete

கருத்துக்கள்