Saturday, November 17, 2012

பாலை : தமிழர்களை போர்க்குணமிக்க படையாக மாற்றுவதற்கு கிடைத்த ஆயுதம்

ஊடகங்களிலும் நட்சத்திர ஆதிக்கம் இருந்த கோலிவூட்டில் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் பற்றிய செய்திகள்தான் அதிகம் வெளிவருகின்றன. ஆனால் இதையும் மீறி சில வித்தியாசமான படங்கள் வெளிவருகின்றன. இவை வந்ததும் தெரியாமல் உள்ளது.





அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள படங்களில் ஒன்றான ''பாலை'' மீது கவனத்தை செலுத்துவோம்.








''பாலை'' படத்தின் கதை முல்லை நிலத்தில் இருக்கும் இரண்டு குடிகளுக்குமிடையிலான போர் பற்றியது. இது அரசர்களின் கதையல்ல. மாறாக சாதாரண மக்களின் கதை. அந்தவகையில் இத்திரைப்படம் சாதாரண மக்களின் வாழ்க்கையை, வரலாற்றைப் பேச விளைகின்றது.


தமிழ்த் திரைப்படச் சூழலில் இந்தப் போக்கு புதிது. நாம் ஒவ்வொருவரும் ஆதரவு கொடுக்கவேண்டிய திரைப்படமாகும். கலைத்துவ அம்சங்களை மட்டும் வைத்துக்கொண்டு தமிழின விரோதப்போக்கைக் கடைப்பிடிப்பது அயோக்கியத்தனம். சமகால வரலாற்றில் இது வேண்டத்தகாத செயலாகும்.


சங்ககாலத் தமிழர்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லும் முறையால் வித்தியாசமான களத்தில் பயணம் செய்துள்ள இயக்குநர் செந்தமிழன், இந்தப் போக்கு தமிழ்த் திரைப்பட உலகிற்கு புதிது.


கடவுள், சாதி, மதம் கடந்து உண்மையான தொன்மை வரலாற்றை தமிழர் இன்னும் பதிவுசெய்யவில்லை. அந்தவகையில் தொல் குடிகளின் தொன்மையான வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியே பாலை எனும் திரைப்படம்.


நம் தமிழ்ச் சமூகத்தில் பெருமிதங்களையும் மரபுகளையும் கூறி தமிழ் மக்களை அடிமை மனநிலையில் இருந்து விடுவித்து போர்க்குணமிக்க படையாக மாற்றுவதற்கு கிடைத்த ஆயுதமாக பாலை திரைப்படம் அமைந்துள்ளது.


பருவப் பிள்ளைகளிடையே மூளும் காதல் அவர்களது கூடல் அதை அறிந்து அவர்களது இணைப்பை சமூகம் அங்கீகரிக்கும் திருமணக் கொண்டாட்டம், கூட்டு மனநிலைக் கடத்தல் போன்ற விடயங்கள் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளங்கள்.

இவை ஒற்றைப் பரிமாணம் கொண்டவை அல்ல. பல்பரிமாணமிக்க உயிர்ப்பான சமூகத்தின் எளிமையான அடையாளங்களும் கூட.


இப்படி நடைமுறை வாழ்க்கையில் எளிமை மாத்திரமின்றி அண்டைக் குழுக்களுடன் நேர்மையாகவும் இருக்க முயற்சிக்கிறார்கள் முல்லைக்குடிமக்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக அந்த நேர்மையை தமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு வஞ்சகம் செய்கிறது ஆயக்குடி சமூகம். இந்த இரு சமூகங்களுக்கிடையிலும் போர் மூளுகிறது. இங்கு குடிகளுக்கான போர் என்பதிலும் கூட மிகைப்படுத்தல்கள் எட்டிப்பார்க்கவில்லை.


யானைகளை விரட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கவன்கள் முறை உட்பட அந்தக் காலத்தில் பல்வேறு போர் முறைகள் நமக்கு ஆச்சரியம் தருகின்றன. போரில் வெற்றிபெறுவதற்கு எவையெல்லாம் தேவையென்று முல்லைக்குடியைச் சேர்ந்த முதுவன் சுட்டிக்காட்டுவது யாவும் சத்தியவார்த்தைகள்.


 ''முல்லைக் குடிக்கு அடிமைகள் தேவையில்லை. முல்லைக் குடி யாருக்கும் அடிமை இல்லை'' போன்ற வார்த்தைகள் நமது கவனத்துக்குரியது.


ஆண்களுக்கு நிகராக போருக்குத் தாயாராகும் வீரத் தமிழ்ப்பெண்களையும் தம் இனக்குழுவிற்கு ஆபத்து நேரும் போது வில்லெடுத்து களத்திற்கு வந்துநிற்கும் சங்ககால சிறுவர் கூட்டத்தையும் பாலை அடையாளம் கட்டுகிறது.


ஆரம்பத்தில் பெண்களை வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் மரபை தமிழினம் கொண்டிருக்கவில்லை என்ற உண்மையையும் எடுத்துக்காட்டுகிறது.





இதைவிட பார்ப்பணியத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட பழம் தமிழ்க் குடியாக இருளர் சமூகப் பெண்கள் பலரும் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இவை இதுவரையில் தமிழ்த்திரைத் துறையில் இடம்பெறவில்லை.


போர் என்றால் எதிரியைத் தாக்குவதல்ல, எதிரியை வீழ்த்துவதென முல்லைக்குடி முதுவன் கூறும் போதும், ''தலைவர் எங்கே.... தலைவர் எங்கே...'' எனத் தேடாதே; எதிரியை, ''எங்கே... எங்கே எதிரி'' என எதிரியை தேடுங்கள் என்று பொருள்படும்படி முல்லைக்குடித் தலைவர் விருந்திரன் தனது வீரர்களுக்கு போர்க்களத்தில் கூறும்போது இந்த வார்த்தைகள் நமது சமகாலத் தமிழர் அரசியலில் வாசிப்பாகவும் கட்சியாகவும் நீட்சி பெறுவது தவிர்க்க முடியாது. 


அவ்வப்போதும் பாலை முதுவன் உதிர்க்கும் வசனங்கள் அனைத்தும் மனதில் இடம்பிடிப்பவையாக உள்ளன.


முதுவன் தனது மகன் இறந்த கதையை யதார்த்தமாகக் கூறும்போது நெஞ்சில் பாலையின் கொடூரத்தை உணரவைக்கிறார். கதைப்படி அவர் கூறுகின்ற பாலை என்ற வாழ்விடப்பரப்பு தற்போது சோமாலியாவில் நிகழ்ந்துவரும் வரலாறுகாணாத பெரும் பஞ்சத்தைப் போன்றது என உணர முடிகிறது.


உடன்போக்கு, ஆநிரைக் கவர்தல், திருமணமுறை, யானைகளை விரட்ட கவன்கள் எரிதல் புகை மூலம் பேசும் முறை என சங்ககால வாழ்வியல் பதிவுகள் படமெங்கும் சிதறிக்கிடக்கின்றன.


போர் முடிந்த பிறகு தலைவர் குளக்கரையில் மயங்கி கிடப்பது போன்றும் அதன் பிறகு தலைவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்ற செய்தியோடு படம் முடிகிறது. தலைவன் மரித்தாலும் விடுதலைப் போராட்டம் தொடருமென்கிற வரலாற்று உண்மையை பாலை இயக்குநர் செந்தமிழர் நுணுக்கமாக பதிவு செய்கிறார்.

  
நிலமும் பெண்டலும் தனியுடைமையாகாத அந்தக் காலகட்டத்தில் தலைவனும் தலைவியும் கல்லுண்டு கலவி கொள்ளும் காட்சி அழகிய வெளிப்பாடு சார்ந்தது.


நகரமயமாக்கல், உலகமயமாக்கல் முதலானவற்றின் தாக்கத்திற்கு உட்பட்டிருக்கும் இன்றைய காலத்தில் பாலை, காலத்தின் தேவையாகவும் காட்சியின் கருத்துமாக பரிணமித்துள்ளது. நாம் அதிகம் மிகைப்படுத்தல் நிரம்பிய படங்களையே பார்த்துப் பழகிவிட்டோம். இந்தப் பார்வைக் கோலங்களை பாலை திரைப்படம் மாற்றியமைக்க விளைகிறது.





இப்படத்தில், நடிகர்-நடிகைகளின் நடிப்பு, ஆடை ஒப்பனைகள், அலங்காரமென எதிலும் மிகையில்லை. இந்தப் படம் உண்மை சார்ந்த முன்னகர்வு, வரலாற்றுணர்வின் மீட்டுருவாக்கம். புராணப் படலங்களையும் சில வரலாற்றுப் படங்களையும் பார்த்த எமக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக அமைகிறது.


இன்றைய படத்தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பணம் படைத்த அரசியல்வதிகள் தமிழர் பண்பாடு என்ற பெயரில் சினிமா சந்தையில் ஏகபோக வணிகம் செய்துவருகிறார்கள். இந்தப் பின்னணியில் பாலை திரைப்படத்திற்கான உழைப்பு பாராட்டத்தக்கது.


மாற்றுத் திரைப்பட முயற்சிகளில் ஈடுபடுபவருக்கு கருத்தியல் தெளிவும் படைப்பாக்க உந்துதலும் சமூகவரலாற்று உணர்வும் முக்கியம் என்பதை பாலை படமாகவும் முன்வைக்கிறது.


நான் படித்தவற்றில் பிடித்தது.





நன்றி.

1 comment:

  1. பார்க்க வேண்டும்... விமர்சனத்திற்கு நன்றி...

    ReplyDelete

கருத்துக்கள்